நித்ய கிரியா - மனித சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட ஒரு மகத்தான பொக்கிஷம்

வாழும் அவதார புருஷர் பரமஹம்ஸ நித்யானந்தர், யோக முறைகளைத் தற்கால மனித சமுதாயத்திற்கு ஏற்ப புதுப்பித்துள்ளார். 
தற்காலத்தில் இருக்கும் நடைமுறை வாழ்வியல் பிரச்சனைகளுக்குத் தீர்வளிக்கும் வகையிலும், ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பயனளிக்கும் வகையிலும் அவற்றை 
எளிமையான நுட்பங்களாக வடிவமைத்துள்ளார். 
அவ்வாறு பரமஹம்ஸரால் வெளிப்படுத்தப்பட்ட யோக நுட்பமுறைகளையே ‘நித்யகிரியா’ என்கிறோம்.  

நித்ய கிரியாவின் தனித்துவமே, அது மேன்மையும் புனிதமும் வாய்ந்த யோக 
வேத நூல்களின் ஆதாரத்திலிருந்து பெறப்பட்டதென்பதோடு மட்டுமல்லாமல், 
பரமஹம்ஸர் தம் சொந்த அனுபவங்களிலிருந்து பெற்ற நுட்ப முறைகளையும்
அதனோடு ஒருங்கிணைத்துக் கொடுத்திருப்பதுதான். காலத்தால் நிரூபிக்கப்பட்ட வேத அனுபவ அறிவையும், தற்கால
அறிவியல் முறையில் நிரூபிக்கப்பட்ட செயல்முறை நுட்பங்களையும் இணைத்து
வடிவமைத்துள்ளார், பரமஹம்ஸர்.

அனைத்து கிரியாக்களையும் காண இங்கே சொடுக்குங்கள்... click here ...

பரமஹம்ஸ நித்யானந்தர் ஒரு சிறந்த யோகி. காலத்தால் மறைந்துபோன, இன்றைய நவீன யுக யோக புத்தகங்களில் காணப்பட முடியாத பல யோக நுட்பமுறைகளைப் பயின்றவர். அவர், தம்முடைய சிறுவதிலிருந்தே யோக ஆற்றல்களில் கரைகண்ட சிறந்த யோக குருமார்களினால், அசாதாரணமுறையில் பயிற்றுவிக்கப்பட்டார்.

 ஏன் நித்ய கிரியா?

 இன்றைய இந்தியா, தன்னுடைய பொக்கிஷமான யோகப் பாரம்பரியத்தையே இழந்துவிடும் அபாயகரமான கட்டத்தில் நிற்கிறது. ஏனென்றால், ஒரே இரவில் யோகத்தைக் கற்றுக் கொண்டு, அதை மக்களுக்குப் போதிக்கத் தொடங்கிவிடும் யோக ஆசிரியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்கள் கீழை நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, மேலை நாட்டை சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி, ‘யோகா’ என்ற பெயரில், சில உடற் பயிற்சிகளையும் மூச்சுப்பயிற்சிகளையும் இணைந்த ஒரு கலவையைக் கற்றுக் கொடுக்கிறார்கள். 

இவர்களிடம் பயிலும் மாணவர்களுக்கு, யோகத்தை பற்றிய போதிய அறிவு இல்லாததால், அவர்களும் இந்த ஆசிரியர்களின் நம்பகத்தன்மையப் பற்றி எந்தவித சந்தேகமும் கொள்ளாமல் இவற்றைக் கற்றுக் கொள்கிறார்கள். அதனால், இந்த ஆபத்தான நிலையிலிருந்து யோகத்தை மீட்டெடுத்து, அதை எதிர்கால சந்ததியினருக்கும் பாதுகாத்து வைக்கும் நோக்கத்தோடுதான் நித்ய கிரியா அறிமுகப்படுத்தப்படுகிறது. ஏனென்றால் எண்ணற்ற ஞானிகள், தங்களுடைய வாழ்வையே இந்த யோக விஞ்ஞானத்தை மேம்படுத்த அர்ப்பணித்திருக்கிறார்கள். எத்தனையோ ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இந்த உள்ளுணர்வு விஞ்ஞானத்தை, ஆராய்ச்சிகள் செய்து, அடுத்தடுத்து நிலைக்கு மேம்படுத்திய ஞானிகளின் பங்களிப்பை நம்மால் கணக்கிடமுடியாது, அளவிடமுடியாது. 

எத்தனையோ ஞானிகள் தங்கள் உடல், மனம், ஆன்மா மூன்றையும் அர்ப்பணித்து கண்டெடுத்த இந்த விலைமதிக்கமுடியாத வைரத்தைத் தவறவிடவோ அல்லது உருத்தெரியாமல் சீர்குலைக்கவோ விடப்போவதில்லை என வாழும் அவதார புருஷர் பரமஹம்ஸர் நித்யானந்தர் உறுதிமேற்கொண்டிருக்கிறார்.
யோகமும் கிரியையும் - இன்றைய நவீனயுக மனிதனுக்கும் பயன் அளிக்ககூடிய வகையிலும் இருக்கவேண்டும். ஆனால் அதே சமயத்தில், யோக ஞானிகளான கோரக்நாதர், மத்ஸ்யேந்திரநாதர் போன்றவர்கள் கற்றுக்கொடுத்த யோக சாஸ்திரத்தின் சாரம் நீர்த்துப் போகாமல் இருக்க வேண்டும் எனும் இந்த இரண்டு நோக்கங்களும் நிறைவேறும் வகையில், பரமஹம்ஸ நித்யானந்தர் நித்ய கிரியாவை வடிவமைத்துள்ளார். 

பரமஹம்ஸர், யோக வல்லுனர்களான கோரக்நாதர், மத்ஸ்யேந்தரநாதர் போன்றவர்களின் யோகப் பயிற்சி முறைகளை அடிப்படையாக வைத்து, இன்றைய நவீனயுகமனிதனுக்கும் பயன் அளிக்கும் வகையிலும் தம்முடைய குருமார்களிடமிருந்து கற்ற நுட்பங்களையும் ஒருங்கிணைத்து வழங்கியிருக்கிறார். நமது யோக குருமார்கள், தம்முடைய சொந்த விழிப்புணர்வாலும் பெற்ற பயிற்சிகளாலும் கிடைத்த அனுபவங்களை அடிப்படையாக வைத்து தொடர்ந்து நுட்பங்களை மேம்படுத்திக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் மேம்படுத்துவதற்கான சாத்தியங்களையும், அதற்கான வாய்ப்புக் கதவுகளையும் எப்போதும் திறந்து வைத்திருக்கிறார்கள். 

அவர்கள் என்றுமே எதையுமே, இதுதான் இறுதி நுட்பம், இதற்குமேல் இதில் முயற்சி செய்வதற்கு ஒன்றுமே இல்லை," என்று சொல்லி, அடுத்தடுத்த சாத்தியக்கூறுகளை அடைப்பதில்லை.

நித்ய யோகாவின் ஆன்மீக வேர் : 

நித்யயோகா, தெய்வீகமான வேத நூல்களையே தன்னுடைய உறுதியான நங்கூரமாகக் கொண்டிருக்கிறது. நித்ய யோக ...பதஞ்ஜலி யோக சூத்திரங்களையும், யோகத்தின் அடிப்படை நூல்களாகக் கருதப்படும் ஹட பிரதீபிகா, கேரண்டஸம்ஹிதை மற்றும் சிவ ஸம்ஹிதைகளிலிருந்து எடுக்கப்பட்ட யோகப் பயிற்சிகளின் சாரமாகும். 

பதஞ்ஜலி யோக சூத்திரங்கள்

பதஞ்சலி யோக சூத்திரங்களின் காலம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கூறப்பட்டாலும், இந்நூல் அதற்கும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய சாஸ்திர நூல் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். பதஞ்ஜலி முனிவரால் எழுதப்பெற்ற இந்நூல்தான் யோக சாஸ்திரங்களுக்கே அடிப்படை ஆதார நூலகத் திகழ்கிறது. இதில் சொல்லப்பட்டிருக்கும் நுட்பங்கள் மறைபொருளாகவும், ஒரு சிலருக்கே புரியும் வகையில் இருந்தாலும், பயிற்சி செய்யக்கூடிய வகையில் அதாவது நம் அன்றாட வாழ்வில் எளிதாகக் கடைப்பிடிக்கும் வகையில் இருக்கின்றன. அது அறிமுகப்படுத்தும் அஷ்டாங்க யோக முறைகளை, நம் வாழ்க்கை முறையாக மாற்றும்படி அது வலியுறுத்துகிறது.

ஹடயோகப்ரதீபிகா :

ஹடப்ரதீபிகா, கோரக்நாதரின் சீடரான ஸ்வாமி ஸ்வாத்மாராமாவினால் எழுதப்பட்டது. இந்நூல் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஆதிநாதரான சிவபெருமான், தம்முடைய துணைவியான தேவி பார்வதிக்கு ஹட யோகப் பயிற்சிகளின் இரகசியங்களைப் போதித்தார். யோகிகளின் பரம்பரை வழியாகப் பயணித்து வந்த இந்த யோக நுட்பங்களையே இந்நூல் அடிப்படையாகக் கொண்டிருப்பதால், இந்நூலை ஆதிநாதரான சிவபெருமானுக்கே அர்ப்பணித்துள்ளார், இந்நூலாசிரியர்.

ஹடப்ரதீபிகா ஆனஸங்கள், பிராணாயாமங்கள், பந்தனங்கள், முத்ராக்கள் போன்ற நான்கு முக்கியமான உபதேஸங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இது சக்கரங்கள், நாடிகள், குண்டலினி சக்தி போன்றவற்றைப் பற்றியும் விரிவாக விளக்குகிறது. 20 நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்த யோக நூல்கள் எழுதப்பட்டபோது, மனித இயல்புகள் எவ்வாறு இருந்தனவோ, அவை அப்படியே இப்போதும் இருக்கின்றன.

இன்னும் சொல்லப்போனால், நவீன யுக மனிதர்கள் வேறு பல முக்கியமான பிரச்சினைகளையும் தங்கள் வாழ்வில் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அவை நம்முடைய செல்களின் செயல்முறைகளிலும், மூளையின் செயல்முறைகளிலும்கூட பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் ஏற்படும் மன அழுத்தம், ஒரு அவசர வாழ்க்கை முறை, சமுதாய ரீதியான உண்மைகளை மாற்ற நினைத்தல் போன்ற சங்கடங்களையும் சமாளிக்கவேண்டியுள்ளது. நித்ய கிரியாவிலிருக்கும் நுட்பங்கள், இன்றைய நவீன யுக மனிதனின் உடலில் பரிசோதிக்கப்பட்டு, அவை எந்தளவிற்குப் பயனளிக்கின்றன என்பதை நவீன ஆராய்ச்சிகள் மூலம் உறுதியாக நிரூபிக்கப்பட்ட பிறகே பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அளிக்கப்பட்டுள்ளன.

நித்ய கிரியா மூன்று அடுக்குகளைக் கொண்ட பரிசோதனை முறையால் மலர்ந்த ஒரு நுட்பம்.

1. பரமஹம்ஸ நித்யானந்தர், தாமே பயிற்சி செய்து, நமக்காகத் தொகுத்துக் கொடுத்த நுட்பங்களே நித்யகிரியா யோகா. பரமஹம்ஸ நித்யானந்தர், இன்றைய நவீனயுக மனிதனின் சிக்கலான உடல், மன மற்றும் மூச்சு விகிதாசாரங்களுக்கு ஏற்ற முறையில் நித்யகிரியா யோகாவை வடிவமைத்துள்ளார். வேதகால ஆன்மீக நுட்பங்களுடன் தம்முடைய சொந்த புரிதலையும் சேர்த்துக் கொடுத்து, யோக விஞ்ஞானத்தை மெருகேற்றியிருக்கிறார். 

2. பரமஹம்ஸ நித்யானந்தர், ஒரு நுட்பத்தை தாம் பயிற்சிசெய்து, அது வெற்றிபெற்றவுடன், குறிப்பிட்ட சீடர்கள் குழுவைத் தேர்ந்தெடுத்து, தொடர்ந்து 21 நாட்களுக்கு அவர்களை அதை சிரத்தையுடன் பயிற்சி செய்ய வைத்து, அதனால் பெறப்படும் பதில் விளைவுகளையும் பார்த்து, அதற்கு ஏற்ற நுட்பங்களை ஒருங்கிணைத்துள்ளார். இதே போன்றே ஒவ்வொரு கிரியாவும் அந்தந்த நோயாளிகளிடமும், விதிமுறைகளுக்குட்பட்ட ஒரு குழுவினரிடமும் பரிசோதிக்கப்படுகின்றன. 

3. இந்த முறையில், போதிய அளவிற்குப் பரிசோதிக்கப்பட்ட பிறகு, இந்த கிரியாக்கள் உலகம் முழுவதிலுள்ள வெவ்வேறு காலாச்சாரத்தையும், வயதினரையும், நாட்டையும் சேர்ந்த 1000 - 2000 தன்னார்வ தொண்டர்களுக்கும், பக்தர்களுக்கும் வழங்கப்படுகின்றன. இவர்கள் பரமஹம்ஸரின் நேரடியான கண்காணிப்பின் கீழோ அல்லது இருவழிக் காண்ணொளி காட்சியின் மூலமாகவோ பயிற்சி செய்கிறார்கள். அவர்கள் பயிற்சி செய்தபின், அவர்களுக்குள் உடல்-மன அளவில் ஏற்படும் விளைவுகளும் அறிவியல் ரீதியாகப் பரிசோதிக்கப்படுகின்றன. இவ்வாறு 3 அடுக்குகளாகப் பரிசோதிக்கப்பட்ட பிறகே அவை பொதுமக்களுக்கு அளிக்கப்படுகின்றன.
எந்த சீடர் தன் மனக்கதவுகளை குருவிடம் திறந்து வைக்கிறாரோ, அவருக்குள் இந்த கிரியைகள் மிகப்பெரிய உணர்வுமாற்றத்தை நிகழ்த்துகிறது என எல்லா யோக சாஸ்திரங்களும் பகர்கின்றன. 

யார் வேண்டுமானாலும், இந்த யோக நுட்பங்களை, வெவ்வேறு யோக நூல்களிலிருந்து எடுத்து வெட்டி, ஒட்டி ஏதோசெய்து யோகாவைக் கற்றுக் கொடுக்கலாம். ஆனால் அதே கிரியாக்களை ஒரு ஞானகுருவின்முன் பயிற்சி செய்யும்போது கிடைக்கும் பலன்களை அளவிடமுடியாது. 

குறிப்பாக தம் உணர்வை முழுமையாகத் திறந்துவைக்கும், எதையும் அப்படியே உள்வாங்கிக் கொள்ளும் மனப்பாங்கோடு இருக்கும் பயிற்சியாளர்கள் அனைவரும், குறிப்பாக நேரடியாக குருவிடம்(guru) தீட்சைபெற்று, (initiation)கிரியாவைப் பயிற்சிசெய்பவர்கள், இந்த கிரியாக்களினால் அடையும் பலன்களை சொல்லிமாளாது. உயர்ந்த விஞ்ஞானமாகவும், அதே சமயத்தில் ஒரு புதிர் அனுபவமாகவும் இருக்கும் ‘தீட்சை’யைப் பற்றி உங்களுக்குப் புரியவைக்க முதலில் ‘ஒலி பிரதிபலிப்பு’ தத்துவத்தை விளக்குகிறேன். ‘பிரதிபலிப்பு’ தத்துவத்தை விளக்குவதன் மூலம் உங்களுக்கு ஓரளவாவது புரிய வைக்கமுடியும்.

‘ஒலி பிரதிபலிப்பு’ தத்துவம் 

ஒரு கிண்ணத்தில் இருக்கும் தண்ணீரை, ஒரு இரும்புக்கம்பியால் சரியான அலைவரிசை முறைப்படி அடிக்கும்போது, அது ஒரு குறிப்பிட்ட ஒலியை எழுப்புகிறது. அதுபோல ஞானகுருவால் பாய்ச்சப்படும் சூட்சும சக்தியின் ஆற்றல், பயிற்சிசெய்பவரின் சக்தியை உயர் ஆன்மீக நிலைகளுக்கு, அலைவரிசைகளுக்கு எடுத்துச் சென்றுவிடும். அந்தநேரங்களில், மனமும் உடலும் தங்களுடைய எதிர்ப்புத்தன்மைகளை இழந்துவிடுகின்றன. உடல் நலத்திலும், மனவளத்திலும் தங்களுக்கென்று இருக்கும் உயர்பட்ச சாத்தியக்கூறுகளை அவை எட்டுகின்றன.

குருவிடம் தீட்சைபெறுவதை அனைத்து சம்பிரதாயங்களும், மதங்களும் ஏதோ ஒரு வகையில் வலியுறுத்துகின்றன.

 

அனைத்து கிரியாக்களையும் காண இங்கே சொடுக்குங்கள்...
click here ...